உலகக்கோப்பை மீது கால் வைத்தபடி இருக்கும் மிட்சல் மார்ஷ் புகைப்படம் வைரல்
நேற்று (நவம்பர் 20) நடைபெற்று முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிக் களிப்பில் மூழ்கியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மிட்சல் மார்ஷ் உலகக்கோப்பையின் மேல் கால்களை வைத்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகியிருக்கிறது. அந்தப் புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், பேட் கம்மின்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாகப் பகிர்ந்திருக்க, அதனை மிட்சல் மார்ஷூம் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பல்வேறு தரப்பு கிரிக்கெட் ரசிகர்களும் மிட்சல் மார்ஷின் இந்தச் செயலுக்கு கடும் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர். மேலும், கோப்பைக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் அவரை இணையத்தில் விளாசி வருகின்றனர்.