WTC வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் வரலாற்று சாதனை
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவின் மேக்கே நகரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த அபார பந்துவீச்சின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் 230 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து மிட்செல் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
WTC வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதன்மைப் பந்துவீச்சாளர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 56 போட்டிகளில் விளையாடி 230 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் ஆகிய இருவரும் தலா 225 விக்கெட்டுகளுடன் கூட்டாக இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 195 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா 185 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
வங்கதேசம்
22 பந்துகளில் 5 விக்கெட்டுகளை சாய்த்து வங்களதேசத்தை முடக்கிய ஸ்டார்க்
இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அதைத் தொடர்ந்து தனது அபாரமான வேகத்தால் வெறும் 22 பந்துகளில் 5 விக்கெட்டுகளை சாய்த்து வங்கதேச கிரிக்கெட் அணியின் முதன்மை பேட்டிங் வரிசையை நிர்மூலமாக்கினார்.
ஸ்டார்க்கின் இந்த மிரட்டலான பந்துவீச்சால் நிலைகுலைந்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 64 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
சாதனை முறியடிப்பு
நடப்பு WTC சுற்றிலும் முதலிடம் மற்றும் டேல் ஸ்டெய்ன் சாதனை முறியடிப்பு
தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றிலும் 10 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க்கே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.
மேலும், இப்போட்டியில் 5வது விக்கெட்டைக் கைப்பற்றிய போது, தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னின் (439 விக்கெட்டுகள்) சாதனையை முறியடித்த ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 441 விக்கெட்டுகளுடன் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.