மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனின் 12வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆகிய இரண்டு அணிகளும் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோத உள்ளது. போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளன. நடப்பு சீசனில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. இதற்கிடையில், சிஎஸ்கே தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்திடம் தோல்வி அடைந்தாலும், இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 30 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், சிஎஸ்கே 14 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : வீரர்களின் ஒப்பீடு
ரோஹித் சர்மாவின் சமீபத்திய ஐபிஎல் ஃபார்ம் சிறப்பாக இல்லை என்றாலும், முதல் போட்டியில் 121.42 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 51 ரன்கள் எடுத்துள்ளார். எம்ஐ நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் முக்கியமானவராக இருப்பார். எம்ஐ பந்துவீச்சை பொறுத்தவரை ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் முக்கிய பங்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்து வலுவான வீரராக உள்ளார். மேலும் அணியில் பெரும்பாலான வீரர்கள் பேட்டிங்கும் செய்வர் என்பதால், சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தால் வலுவான ஸ்கோரை இலக்காக வைக்கும் என எதிர்பார்க்கலாம்.