ஆகாஷ் மத்வாலுக்கு உள்ளூரில் கிரிக்கெட் விளையாட தடை இருப்பது தெரியுமா? காரணம் இதுதானாம்!
ஐபிஎல் 2023 எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய அடையாளமாக மாறிய ஆகாஷ் மத்வாலின் சகோதரர் ஆஷிஷ் மத்வால், ஆகாஷின் கிரிக்கெட் பின்னணியில் இருந்து சில சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆஷிஷ் மத்வால் இது குறித்து கூறுகையில், ஆகாஷ் மத்வாலை அவரது சொந்த ஊரில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியூருக்கு சென்று தான் கிரிக்கெட் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் மத்வாலுக்கு விளையாட தடை விதிப்பது ஏன்?
ஆஷிஷ் மத்வால் அளித்த பேட்டியில், ஆகாஷின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு உதவியதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாராட்டினார். "ரோஹித் ஷர்மா வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறார். அவர் தனது வீரர்களை நம்பி அவர்களை ஆதரிக்கிறார். ஒரு புதிய வீரர் எப்போதும் அணியில் தனது இடத்தை தக்கவைக்க பயப்படுவார். ரோஹித் அந்த பயத்தை நீக்கிவிட்டார். ஆகாஷ் இப்போது சிறப்பாக செயல்படுகிறார்." என்று ஆஷிஷ் கூறினார். ஆஷிஷ் மேலும், 'ஆகாஷின் வேகத்தை எதிர்கொள்ள மக்கள் பயந்ததால், உள்ளூர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆகாஷ் ரூர்க்கிக்கு வெளியே சென்று விளையாடுவது வழக்கம்." என்று கூறினார்.