லியோனல் மெஸ்ஸிக்கு பிஎஸ்ஜி அணியில் மரியாதை கிடைக்கவில்லை என கைலியன் எம்பாபே குற்றச்சாட்டு
கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கைலியன் எம்பாபே பாராட்டினார். ஆனால் அவர் பிரான்சில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடியபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். லியோனல் மெஸ்ஸி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஎஸ்ஜி அணியில் இணைந்தார். பிஎஸ்ஜி அணியில் இருந்த காலத்தில் இரண்டு லீக் 1 பட்டங்களையும் உலக கோப்பையையும் வென்றார். ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. உச்சகட்டமாக, மே மாதம் சவூதி அரேபியா சென்றதற்காக இரண்டு வாரங்கள் இடைநீக்கம் செய்தது. இறுதியில், 2022-23 சீசன் முடிவில், அவரது ஒப்பந்தத்தின்படி பிஎஸ்ஜி அணியிலிருந்து வெளியேறி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் சேரப் போவதாக அறிவித்தார்.
பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகும் கைலியன் எம்பாபே
பிஎஸ்ஜி அணியில் கைலியன் எம்பாபேவின் ஒப்பந்தம் 2024இல் முடிவடைய உள்ள நிலையில், அதனை நீட்டிக்க விரும்பவில்லை எனக் கூறி அணி நிர்வாகத்திற்கு எம்பாபே கடிதம் அனுப்பியுள்ளார். அவரை தக்கவைக்க அணி நிர்வாகம் கடுமையாக முயன்று வரும் நிலையில், எம்பாபே தனது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அணி நிர்வாகத்தின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படையாக பேட்டியும் கொடுத்துள்ளார். அந்த பேட்டியில், லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியிலிருந்து வெளியேறியதை நிர்வாகிகள் பலர் கொண்டாடினர் என்றும், அதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி வெளியேறுவது பிஎஸ்ஜி அணிக்கு தான் பேரிழப்பு என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.