பாராலிம்பிக்கில் மின்னிய மற்றொரு தமிழ் மண்ணின் வைரம்: துளசிமதி முருகேசன்
22 வயதான பாரா-ஷட்லர் துளசிமதி முருகேசன் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரின் அர்ப்பணிப்பு, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த இந்திய பாரா-பேட்மிண்டன் வீராங்கனை செப்டம்பர் 2 அன்று பாரிஸ் பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்ததுடன், பாராலிம்பிக்கில் பாட்மிண்டனில் உச்சநிலை எட்டிய முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்றையும் எழுதினார். மேலும் இவர் தமிழ் மண்ணின் வீராங்கனை என்பது கூடுதல் சிறப்பாகும்.
விருதுகளை அள்ளிக்குவிக்கும் காஞ்சியின் வீர மங்கை துளசிமதி
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் துளசிமதி முருகேசன். மாற்று திறனாளியான துளசிமதிக்கு, 22 வயதில் ஏற்பட்ட விபத்தில் அவருடைய இடது கையின் இயக்கம் பாதிக்கப்பட்டது. இப்படி சவாலான சூழல் இருந்தபோதிலும், தீவிர விளையாட்டு பிரியாரான துளசிமதியின் தந்தை, அவரை சிறு வயது முதல் ஷட்டில் விளையாட ஊக்குவித்தார். 7 வயது முதல் தனது ஆட்டத்தை துவங்கிய துளசிமதி, சென்னையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் படித்துள்ளார். துளசிமதி ஷட்டில் விளையாட்டில் பல விருதுகளை பெற்றுள்ளார். மானசி ஜோஷியுடன் இணைந்து 5வது ஃபாஸா துபாய் பாரா-பேட்மிண்டன் இன்டர்நேஷனல் 2023 இல் பெண்கள் இரட்டையர் பிரிவில் அவர் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அதே நிகழ்வில் நித்தேஷ் குமாருடன் இணைந்து வெண்கலப் பதக்கமும் பெற்றார்.