
திருமணமான 10 நாட்களில் கார் விபத்தில் பலியான போர்ச்சுகல் அணியின் பிரபல கால்பந்து வீரர்
செய்தி முன்னோட்டம்
லிவர்பூல் ஃபார்வர்ட் மற்றும் போர்த்துகீசிய கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா தனது 28 வயதில் வடமேற்கு ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். டியோகோ ஜோட்டா தனது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவுடன் பயணம் செய்ததாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன, அவரும் விபத்தில் இறந்தார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 12:40 மணியளவில் ஜமோரா மாகாணத்தில் உள்ள செர்னாடில்லா நகராட்சியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, சகோதரர்களின் லம்போர்கினி கார் முந்திச் செல்லும்போது டயர் வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கார் சாலையை விட்டு விலகி தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. ஜோட்டா தனது நீண்டகால தோழியான ரூட் கார்டோசோவை திருமணம் செய்த 10 நாட்களில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தகவல்
தகவலை உறுதி செய்தது போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு
ஜோட்டாவின் சகோதரர் ஆண்ட்ரேவும் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இருந்தார். போர்ச்சுகலின் இரண்டாவது பிரிவில் பெனாஃபியலுக்காக விளையாடினார். ஸ்பானிஷ் சிவில் காவல்படையின் அறிக்கை, விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை உறுதிப்படுத்தியது. டயர் வெடிப்பைத் தொடர்ந்து கார் தீப்பிடித்ததில் இரு பயணிகளும் கொல்லப்பட்டனர் என்பதைக் குறிப்பிட்டது. போர்ச்சுகீசிய கால்பந்து கூட்டமைப்பு இந்த இறப்புகளை முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. கூட்டமைப்புத் தலைவர் பெட்ரோ புரோன்கா ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஜோட்டாவை அனைத்து அணி வீரர்கள் மற்றும் எதிரணியினரால் மதிக்கப்படும் ஒரு அசாதாரண வீரர் என்று குறிப்பிட்டார். ஜோட்டா போர்ச்சுகல் அணிக்காக கிட்டத்தட்ட 50 போட்டிகளில் விளையாடியுள்ளார்.