ஒருநாள் கிரிக்கெட்டில் 7 இரட்டை சதங்களை அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்
கிரிக்கெட்டில் சதமடிப்பதே சாதனையாக கருதப்படும் நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பலர் மிகச் சாதாரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளனர். உலகளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 10 முறை இரட்டை சதங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 7 இரட்டை சதங்கள் இந்திய வீரர்களால், குறிப்பாக அனைத்தும் தொடக்க வீரர்களால் எடுக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் 2010 பிப்ரவரி 24 ஆம் தேதி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து இந்தியாவின் குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 200 ரன்கள் எடுத்தார். எனினும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெலிண்டா கிளார்க் 1997ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக்கோப்பையில் இரட்டை சதம் அடித்த முதல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை சதமடித்த இந்திய வீரர்களின் முழு பட்டியல்
டெண்டுல்கருக்கு அடுத்ததாக, வீரேந்திர சேவாக் 2011இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 219 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ரோஹித் சர்மா 2013இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களும், 2014 மற்றும் 2017இல் இலங்கைக்கு எதிராக முறையே 264 ரன்களும், 208 ரன்களும் எடுத்தார். உலக அளவில் இலங்கைக்கு எதிராக ரோஹித் எடுத்த 264 ரன்கள் தான் ஒரு வீரரின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராக தற்போது வரை உள்ளது. இதற்கடுத்து 2022இல் இஷான் கிஷான் வங்கதேசத்திற்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் 210 ரன்கள் எடுத்தார். வெளிநாட்டில் இந்திய வீரர் எடுத்த முதல் மற்றும் ஒரே இரட்டை சதம் இதுவாகும். கடைசியாக இந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஷுப்மன் கில் 208 ரன்கள் எடுத்துள்ளார்.