கவனம் ஈர்த்த கல்ஃப்ஸ்ட்ரீம் V: லியோனல் மெஸ்ஸியின் ஆடம்பரமான தனியார் ஜெட்டில் இவ்ளோ வசதிகள் இருக்கா!
செய்தி முன்னோட்டம்
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது 'GOAT இந்தியா டூர் 2025' சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பயன்படுத்திய ஆடம்பரமானத் தனியார் ஜெட் விமானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உலகளவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து நட்சத்திரங்கள் தங்கள் பயணத்திற்காக அதிநவீன தனியார் விமானங்களை பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது கவனம் ஈர்த்த லியோனல் மெஸ்ஸியின் விமானம் குறித்த விரிவான தகவல்களை இதில் பார்க்கலாம்.
விமானம்
விமானத்தின் மாடல் மற்றும் விலை
லியோனல் மெஸ்ஸி பயன்படுத்தும் தனியார் ஜெட் விமானத்தின் மாடல் கல்ஃப்ஸ்ட்ரீம் V (Gulfstream V) ஆகும். 2018இல் வாங்கப்பட்ட இந்த விமானத்தின் விலை சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹125 கோடி முதல் ₹136 கோடி வரை) என மதிப்பிடப்படுகிறது. பழைய GV விமானங்களின் விலை சுமார் $9 மில்லியன் முதல் $14 மில்லியன் வரை இருக்கலாம், ஆனால் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட மாடல்கள் (G550/G650) $40 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். இந்த விமானத்தின் அடையாள எண் LV-IRQ ஆகும். இது அர்ஜென்டினாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வசதிகள்
அதிநவீன வசதிகள் மற்றும் தனிப்பயனாக்கம்
கல்ஃப்ஸ்ட்ரீம் V என்பது ஒரு அல்ட்ரா-லக்ஸுரியஸ், அல்ட்ரா-லாங்-ரேஞ்ச் பிசினஸ் ஜெட் ஆகும். இது நீண்ட தூரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சொகுசு விமானமாகும். இந்த ஜெட் 6,500 நாட்டிக்கல் மைல் (12,038 கிமீ) வரை இடைநில்லாமல்ப் பயணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் நியூயார்க்கிலிருந்து டோக்கியோ அல்லது லண்டனிலிருந்து சிங்கப்பூர் போன்ற நீண்ட பயணங்களை எளிதாக மேற்கொள்ள முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 1,084 கிமீ ஆகும். இது 51,000 அடி உயரத்தில் பயணிக்கக்கூடியது, இதன் மூலம் பெரும்பாலான வான்வழிப் போக்குவரத்தைத் தவிர்த்துப் பயணிக்கலாம்.
உள் வசதிகள்
விமானத்தின் உள் வசதிகள்
இதில் 14 லெதர் இருக்கைகள் உள்ளன, அவை நீண்டப் பயணத்தின்போது ஏழு படுக்கைகளாக மாற்றிக் கொள்ள முடியும். முழுவதும் பொருத்தப்பட்ட அடுப்பு, மைக்ரோவேவ் மற்றும் சமையலறை உபகரணங்கள் கொண்ட சமையலறைப் பகுதி உள்ளது. நீண்ட தூரப் பயணங்களை வசதியாக ஆக்க, தனித்தனி ஓய்வறைப் பகுதி, தனி தூங்கும் அறைகள் மற்றும் இரண்டு நவீனக் கழிவறைகள் இதில் உள்ளன.
மெஸ்ஸி
மெஸ்ஸிக்காக மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட அம்சங்கள்
மெஸ்ஸியின் இந்தத் தனிப்பட்ட ஜெட், அவரது குடும்பத்திற்கானச் சில பிரத்யேக அம்சங்களுடன் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. விமானத்தின் வாலில் அவரது புகழ்பெற்ற ஜெர்சி எண்ணான 10 பொறிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் பிரதானப் படியில் அவரது மனைவி அன்டோனெல்லா மற்றும் அவரது மூன்று குழந்தைகளான தியாகோ, மாட்டியோ, சிரோ ஆகியோரின் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. மெஸ்ஸியைப் போன்ற உலகளாவிய நட்சத்திரங்களுக்கு, கல்ஃப்ஸ்ட்ரீம் V ஆனது பயணத்தில் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் மிகவும் முக்கியமான தனிப்பட்ட இரகசியம் ஆகியவற்றை வழங்குகிறது.