LOADING...
உலகக்கோப்பை கால்பந்து 2026: 200-வது சர்வதேச போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை
சர்வதேச போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை

உலகக்கோப்பை கால்பந்து 2026: 200-வது சர்வதேச போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2026
09:44 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து 2026 (FIFA World Cup) தொடரின் குரூப் 'ஜே' முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி அதிரடி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கணக்குகளையும் தவிடுபொடியாக்கும் வகையில், அர்ஜென்டினாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது 200-வது சர்வதேசப் போட்டியில் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சாதனை

ஆறு உலகக்கோப்பைகளில் விளையாடிய முதல் வீரர்

தனது 38-வது வயதில் களம் கண்டுள்ள லியோனல் மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றிலேயே ஆறு உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் ஆண் கால்பந்து வீரர் என்ற அரிய உலக சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாகப் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே ஐந்து உலகக்கோப்பைகளில் விளையாடியிருந்த நிலையில், மெஸ்ஸி தற்போது இந்த இமாலயப் மைல்கல்லை எட்டியுள்ளார்.

சமன்

மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையைச் சமன் செய்த மெஸ்ஸி

இன்றைய போட்டியில் அடித்த 3 கோல்களின் மூலமாக, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் ஜாம்பவான் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார். மேலும், உலகக்கோப்பை அரங்கில் ஹாட்ரிக் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முந்தைய சாதனையையும் முறியடித்து மெஸ்ஸி புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

Advertisement

மேஜிக்

20 ஆண்டுகளுக்குப் பின் அதே நாளில் ஒரு மேஜிக்

கடந்த 2006 ஜூன் 16 அன்று செர்பியாவுக்கு எதிராக மெஸ்ஸி தனது முதல் உலகக்கோப்பை கோலை அடித்திருந்தார். சரியாக 20 ஆண்டுகள் நிறைவடைந்த அதே நாளில் (ஜூன் 16), ரோட்ரிகோ டி பாலின் துல்லியமான பாஸைப் பெற்று ஆட்டத்தின் 17, 60 மற்றும் 76-வது நிமிடங்களில் கோல் அடித்து இந்த மாபெரும் வெற்றியை அர்ஜென்டினாவுக்குப் பெற்றுத் தந்துள்ளார். இப்போட்டியின் மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல் பங்களிப்பு (16 கோல்கள், 8 அசிஸ்ட்கள்) செய்த பிரேசிலின் பீலேயின் சாதனையையும் மெஸ்ஸி முறியடித்துள்ளார்.

Advertisement