சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் பெயர் பரிந்துரை
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், வீரர் பிரிவில் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய ஆடவர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள லியாண்டர், வீரர் பிரிவில் காரா பிளாக், அனா இவானோவிக், கார்லோஸ் மோயா, டேனியல் நெஸ்டர் மற்றும் ஃபிளவியா பென்னெட்டா ஆகியோருடன் ஹால் ஆஃப் ஃபேம் கவுரவத்திற்காக போட்டியிடுகிறார். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறித்து பேசிய பயஸ், "30 ஆண்டுகளாக எனது விளையாட்டின் மீதான ஆர்வம் மற்றும் ஒலிம்பிக் மற்றும் டேவிஸ் கோப்பையில் 1.3 பில்லியன் இந்தியர்களின் பிரதிநிதியாக விளையாடிய பிறகு, எனது கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியர்
சீனாவின் டென்னிஸ் வீராங்கனை லி நா பரிந்துரைக்கப்பட்ட டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியர் ஆவார். 2019 ஆம் ஆண்டு இந்த மதிப்புமிக்க கவுரவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசியர் மற்றும் முதல் ஆசிய டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கிடையே, இந்திய டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜும் பங்களிப்பாளர் பிரிவில் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பங்களிப்பாளர் பிரிவில், ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு விஜய் அமிர்தராருக்கு போட்டியாக புகழ்பெற்ற பத்திரிகையாளர் ரிச்சர்ட் எவன்ஸும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.