குடோ சாம்பியன் சோஹைல் கான் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை: தொடர்ச்சியாக 25வது தேசிய தங்கம் வென்று அசத்தல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி குடோ (Kudo) தற்காப்புக் கலை வீரரான சோஹைல் கான், மத்தியப் பிரதேச மாநிலம் சார்பில் பங்கேற்ற மூன்று முக்கிய தேசிய மற்றும் சர்வதேச குடோ தொடர்களிலும் தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சீனியர் ஆடவர் 21 வயதிற்கு மேற்பட்டோர் (-250 PI) பிரிவில் களமிறங்கிய அவர், 17-வது அதிகாரப்பூர்வ தேசிய குடோ சாம்பியன்ஷிப், 7-வது குடோ ஃபெடரேஷன் கோப்பை மற்றும் 18-வது அக்ஷய் குமார் சர்வதேச குடோ போட்டி 2026-27 ஆகிய மூன்றிலும் முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றார். இந்த இமாலய வெற்றியின் மூலம், தேசிய அளவில் தொடர்ச்சியாக 25 தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை சோஹைல் கான் பெற்றுள்ளார்.
நாக்-அவுட்
சப்மிஷன் வெற்றிகளால் எதிராளிகளை திணறடித்த சோஹைல் கான்
அகமதாபாத்தில் உள்ள வீர் சாவர்க்கர் மைதானத்தில் நடைபெற்ற 17-வது தேசிய குடோ போட்டியில், காலிறுதியில் சத்தீஸ்கர் வீரர் உபேந்திர பிரதானை நாக்-அவுட் முறையிலும், அரையிறுதியில் இமாச்சலப் பிரதேச வீரர் தேவன்ஷ் ஜெய்ஸ்வாலை 30 வினாடிகளுக்குள்ளும் வீழ்த்திய சோஹைல், இறுதிப்போட்டியில் ஹரியானாவின் தீபக் குமாரை நாக்-அவுட் செய்து முதல் தங்கத்தை வென்றார்.
அதனைத் தொடர்ந்து, 7-வது குடோ ஃபெடரேஷன் கோப்பைப் போட்டியிலும் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் வீரர்களை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் மீண்டும் தீபக் குமாரை நாக்-அவுட் செய்து இரண்டாவது தங்கத்தைக் கைப்பற்றினார்.
மேலும், 18-வது அக்ஷய் குமார் சர்வதேச குடோ தொடரிலும் அபாரமாகச் செயல்பட்டு இறுதிப்போட்டியில் நாக்-அவுட் வெற்றியுடன் தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
அடுத்தகட்ட பயிற்சி
2027 உலக சாம்பியன்ஷிப் தகுதி சுற்று
தனது இந்த வரலாற்று வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சோஹைல் கான், "மூன்று தொடர்களிலும் தங்கம் வென்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.
தொடர்ச்சியாக 25-வது தேசியத் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு இன்னும் கடுமையாக உழைக்க எனக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய குடோ தலைமைப் பயிற்சியாளர் ஹான்ஷி மெஹுல் வோரா மற்றும் மத்தியப் பிரதேச பயிற்சியாளர் டாக்டர் முகமது ஐஜாஸ் கான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள சோஹைல், அடுத்த மாதம் இந்தியாவில் உலக ஏடிசி சாம்பியன் மிகோ ஹைட்டோனென் தலைமையில் நடைபெறவுள்ள சர்வதேசப் பயிற்சி முகாமில் பங்கேற்றுத் தனது திறமைகளை மேலும் மெருகேற்றவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.