
கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், கிரிக்கெட் உலகம் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு தயாராகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பையை விராட் கோலி எதிர்நோக்கியுள்ள நிலையில், அது அவரது இறுதித் தொடராக இருக்கலாம் என்று ரசிகர்களும் முன்னாள் சகாக்களும் நம்புகின்றனர்.
அப்போது கோலிக்கு 39 வயது ஆகி இருக்கும், மேலும் இந்த தொடருடன் அவர் விளையாட்டிலிருந்து முற்றிலுமாக வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது.
அதாவது, அதற்குப் பிறகு பயிற்சியாளர், வர்ணனையாளர் அல்லது லீக் பங்கேற்பு உள்ளிட்ட அனைத்தையும் தவிர்ப்பார் என்று அனைத்து அறிகுறிகளும் தெரிவிக்கின்றன.
ரவி சாஸ்திரி
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கருத்து
விராட் கோலியின் நீண்டகால கூட்டாளியான முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த உணர்வை எதிரொலித்தார்.
கோலி தனது விளையாட்டு நாட்களுக்குப் பிறகு நீடிக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார்.
"அவர் இன்னும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய இருக்கிறார், ஆனால் அவர் விலகும்போது, முழுவதுமாக விலகி விடுவார்." என்று ரவி சாஸ்திரி ஸ்போர்ட் ஸ்டாரிடம் கூறினார்.
விராட் கோலி இல்லாதது குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக உணரப்படும்.
விராட் கோலி தனது உடல் தகுதி உச்சத்தில் இருந்தபோதிலும், மன ரீதியாக சோர்வடைந்திருக்கலாம் என்றும், சோர்வு காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் சீக்கிரமே வெளியேறியிருக்கலாம் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.