
'இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் பட்டத்தை வென்றார் இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான பாட்மின்டன் வீரர் கிரண் ஜார்ஜ், இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் 2023 பாட்மின்டன் பட்டத்தை வென்றிருக்கிறார். மேலும், இந்தப் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் கிரண் ஜார்ஜ்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒடிசா ஓபன் பாட்மின்டன் தொடரையும் இவர் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதை இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பட்டத்தையும் சேர்த்து, கிரண் ஜார்ஜ் இரண்டு சூப்பர் 100 பாட்மின்டன் பட்டங்களை வென்றிருக்கிறார்.
பாட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் 50வது இடத்தில் இருக்கும் கிரண் ஜார்ஜ் இன்றைய இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் தரவரிசைப் பட்டியலில் 82வது இடத்தில் உள்ள ஜப்பானைச் சேர்ந்த கூ டகாஹாஷியை எதிர்கொண்டு விளையாடி தோற்கடித்திருக்கிறார்.
பாட்மின்டன்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டி:
மேற்கூறிய இருவருக்குமிடையே 56 நிமிடங்கள் வரை நீடித்த இறுதிப்போட்டியில், 21-19, 22-20 என நேர் செட் கணக்கில் கூ டகாஹாஷியைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியிருக்கிறார் கிரண் ஜார்ஜ்.
இன்றைய இறுதிப்போட்டியின் இரு செட்களிலும் 14வது புள்ளியில் டை ஆக, இரண்டு செட்களிலும் தொடர்ந்து இரண்டிரண்டு புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தை வெற்றி கொண்டிருக்கிறார் கிரண்.
முன்னதாக அரையிறுதிப் போட்டியில், 2014 பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற, இந்தோனேஷியைவைச் சேர்ந்த டாமி சுகியார்தோவை எதிர்கொண்டார் கிரண் ஜார்ஜ்.
டாமி சுகியார்தோவுக்கு எதிராக மூன்று செட்களையும் விளையாடி, 23-21, 16-21, 21-8 என்ற புள்ளிக்கணக்கில் அவரைத் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.