மகளிர் ஐபிஎல் : மாற்று வீராங்கனையாக வந்து 5 விக்கெட் வீழ்த்திய கிம் கார்த்
டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) நடந்த 2023 மகளிர் ஐபிஎல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கிம் கார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் கிம்மின் அபார பந்துவீச்சால் ஒருகட்டத்தில் 105 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் உ.பி.வாரியர்ஸின் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் சோபி எக்லெஸ்டோனின் அதிரடியால் கடைசியில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனால் கிம் 5 விக்கெட் எடுத்தும் குஜராத் ஜெயன்ட்ஸ் இறுதியில் தோல்வியையே தழுவியது.
கிம் கார்த் புள்ளி விபரங்கள்
பிப்ரவரியில் நடந்த ஏலத்தில் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாத கிம் கார்த் கடைசி நேரத்தில் டியான்ட்ரா டாட்டின் விலகியதால் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் மாற்று வீராங்கனையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கிம், 2019 வரை அயர்லாந்து அணியில் விளையாடிய பிறகு சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியில் இணைந்தார். சமீபத்தில் இந்தியா டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஜூலை 2010 இல் அறிமுகமான கிம், 54 டி20 போட்டிகளில் 5.92 என்ற எகானமியில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 23.09 என்ற சராசரியுடன் 762 ரன்களையும் எடுத்துள்ளார்.