
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து மண்ணில் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். லீட்ஸின் ஹெடிங்லியில் நடந்து வரும் முதல் டெஸ்டின் இரண்டாவது நாளில் அவர் இந்த மைல்கல் சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில், ஜோ ரூட் முகமது சிராஜின் பந்தை ஸ்கொயர் லெக்கில் ஃபிளிக் செய்து டெண்டுல்கரின் 1,575 ரன்களின் எண்ணிக்கையை முறியடித்தார். இதன் மூலம், ஜோ ரூட் இப்போது இந்தியாவுக்கு எதிரான சொந்த டெஸ்ட் போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் 1,591 ரன்களை எடுத்து, 30 இன்னிங்ஸ்களில் தனது மொத்த ரன்களை எட்டிய டெண்டுல்கரை முந்தியுள்ளார்.
டாப் 5 வீரர்கள்
பட்டியலில் உள்ள டாப் 5 வீரர்கள்
இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஜோ ரூட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ள நிலையில், அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (1,376), அலஸ்டர் குக் (1,196) மற்றும் சுனில் கவாஸ்கர் (1,152) ஆகியோர் உள்ளனர். இந்த சாதனையுடன், ஜோ ரூட் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை முந்தியுள்ளார். ஜோ ரூட் இப்போது அனைத்து வடிவங்களிலும் 21,033 ரன்களுக்கு மேல் எடுத்து எட்டாவது இடத்தில் உள்ளதோடு, இந்தியாவின் ராகுல் டிராவிட்டிற்கு (24,208) அடுத்து உள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களைக் குவித்து, முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.