டி20 கிரிக்கெட்டில் 11-வது வீரராக அதிக ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் ஜெய்தேவ் உனட்கட்
செய்தி முன்னோட்டம்
சையத் முஷ்டாக் அலி டிராபி 2026 தொடரின் குரூப் பி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு எதிராக சௌராஷ்டிரா கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜெய்தேவ் உனட்கட் உலக சாதனை படைத்துள்ளார். இந்தூரில் வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற இந்தப் போட்டியில் 11-வது வீரராகக் களமிறங்கிய உனட்கட் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 11-வது வரிசையில் இறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை அவர் தனதாக்கியுள்ளார்.
சாதனை முறியடிப்பு
டேனி பிரிக்ஸின் 6 ஆண்டுகால சாதனையை முறியடித்த உனட்கட் மற்றும் சேத்தன் சகாரியா கூட்டணி
இந்த சாதனையின் மூலம் 2020 ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் டேனி பிரிக்ஸ் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் எடுத்த 35 ரன்கள் என்ற 6 ஆண்டுகால உலக சாதனையை உனட்கட் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு 2019 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டொமினிக் டிரேக்ஸ் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
சௌராஷ்டிரா அணி 10-வது ஓவரில் 92/9 எனத் தடுமாறிய நிலையில் சேத்தன் சகாரியாவுடன் இணைந்த உனட்கட் 10-வது விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
தமிழ்நாடு வெற்றி
சௌராஷ்டிராவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ்நாடு; தொடரிலிருந்து வெளியேறிய இரு அணிகள்
முன்னதாக டாஸ் வென்ற சௌராஷ்டிரா பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
தமிழ்நாடு தரப்பில் சன்னி சந்து 44 ரன்களும் சி.ஆண்ட்ரே சித்தார்த் மற்றும் பி.சச்சின் 37 ரன்களும் ஆர்.ராஜ்குமார் 36 ரன்களும் எடுத்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர்.
193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சௌராஷ்டிரா உனட்கட்டின் அதிரடிக்குப் பிறகும் 16.4 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் தமிழ்நாடு 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருப்பினும் எலைட் குரூப் பி பிரிவில் சௌராஷ்டிரா 16 புள்ளிகளுடனும் தமிழ்நாடு 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்துத் தொடரிலிருந்து வெளியேறின.
ஜெய்தேவ் உனட்கட்
ஜெய்தேவ் உனட்கட்டின் சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் சாதனைப் பயணம்
கடந்த 2010 டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமான 35 வயதான ஜெய்தேவ் உனட்கட் இதுவரை 4 டெஸ்ட் 8 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் 2010 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இதுவரை 116 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள உனட்கட் 8.94 எகானமி மற்றும் 30.73 சராசரியுடன் 114 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.