இலங்கை கிரிக்கெட்டை அழித்துக் கொண்டிருக்கும் ஜெய் ஷா; பரபரப்புக் குற்றச்சாட்டு
1996 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவே பொறுப்பு என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரிய (எஸ்எல்சி) அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் தற்போது எஸ்எல்சி பிசிசிஐக்கு அடிபணியும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக ஒரு நேர்காணலில் ரணதுங்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எஸ்எல்சி அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவிற்கும் இடையேயான தொடர்பு பிசிசிஐக்கு எஸ்எல்சிஐக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற எண்ணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். உண்மையில், ஜெய் ஷாவே எஸ்எல்சியை நடத்தி வருவதாகவும், அவரிடமிருந்து வரும் அழுத்தம் எஸ்எல்சியை அழித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அமித் ஷாவால் அதிகாரம் மிக்கவராக உள்ள ஜெய் ஷா
ஜெய் ஷாவின் அதிகாரம் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தையிடமிருந்து பெறப்பட்டது என்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் ரணதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஜெய் ஷா இலங்கை கிரிக்கெட்டை நடத்துகிறார். ஜெய் ஷாவின் அழுத்தத்தால் எஸ்எல்சி நாசமாகிறது. இந்தியாவில் இருந்து ஒருவர் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கிறார். அவர் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தையால் மட்டுமே சக்திவாய்ந்தவர் ஆவார்." என்றார். இதற்கிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியநிர்வாகத்தில் அந்நாட்டு அரசின் தலையீடு காரணமாக, இலங்கை கிரிக்கெட் வாரியாயத்தை சமீபத்தில் ஐசிசி இடைநீக்கம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இந்த பிரச்சினையை எப்படி முடிவுக்கு கொண்டு வரும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.