கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்று பும்ரா சாதனை
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அயர்லாந்து கிரிக்கெட் அணியை டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பிய ஜஸ்ப்ரீத் பும்ரா, இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். இதன் மூலம், டி20யில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமையேற்ற முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்ப்ரீத் பும்ரா பெற்றார். மேலும், வெள்ளிக்கிழமை நடந்த முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.