Loading...
உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று தமிழக வீராங்கனை நிவேதிதா நாயர் சாதனை
ISSF உலக துப்பாக்கிசுடுதலில் 2 பதக்கங்கள் வென்று நிவேதிதா நாயர் சாதனை படைத்துள்ளார்.

உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று தமிழக வீராங்கனை நிவேதிதா நாயர் சாதனை

எழுதியவர் Vasuki
Nov 09, 2026
05:24 pm

செய்தி முன்னோட்டம்

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை நிவேதிதா நாயர் இரண்டு பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். தனிநபர் பிரிவில் 567-13x புள்ளிகளைப் பதிவு செய்த அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற சீனாவின் சியாவோ ஜியாருயிக்சுவான் தங்கத்தையும், ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் வெள்ளியையும் வென்றனர்.

வெள்ளி பதக்கம்

அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

தனிநபர் பிரிவைத் தொடர்ந்து நடைபெற்ற மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் அணிகள் பிரிவிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது.

நிவேதிதா நாயர், மன்வி ஜெயின் மற்றும் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஆகியோர் அடங்கிய இந்தியக் கூட்டணி மொத்தம் 1682-33x புள்ளிகளைக் குவித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இப்போட்டியில் சீனா 1698-43x புள்ளிகளுடன் புதிய உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. ஹங்கேரி அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

இருப்பினும் ஆடவருக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி பதக்க வாய்ப்பை இழந்து நான்காவது இடத்தைப் பிடித்தது.

தோஹா உலக சாம்பியன்ஷிப்

இந்தியாவின் பதக்க பட்டியல்

நிவேதிதா நாயர் வென்ற பதக்கங்களின் மூலம், நடப்பு தோஹா உலகத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை ஒரு தங்கம், 5 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் ஏழாக உயர்ந்துள்ளது.

ஆடவர் 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்தது. மேலும் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் ஆடவர் ஏர் பிஸ்டல் பிரிவுகளில் இந்தியா வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.

குறிப்பாக ஆடவர் பிரிவில் வெள்ளி வென்ற ஜெய்பால் மால்வியா, லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் முதல் ஒதுக்கீட்டு இடத்தை உறுதிசெய்துள்ளார்.

ADVERTISEMENT