சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அயர்லாந்து வீராங்கனை மேரி வால்ட்ரான்
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மேரி வால்ட்ரான் 13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஓய்வை அறிவித்துள்ளார். வால்ட்ரான் 2010இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் முன், அயர்லாந்துக்காக கால்பந்து போட்டிகளில்தான் முதன்முதலில் விளையாடத் தொடங்கினார். அதன் பின்னர் முழுநேரமாக கிரிக்கெட்டில் பங்கேற்ற மேரி வால்ட்ரான், விக்கெட் கீப்பராக 111 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில், அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையையும் கொண்டுள்ளார். மேலும் அயர்லாந்து அணியை இரண்டு ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.
நடுவராகவும் சாதித்த மேரி வால்ட்ரான்
கிரிக்கெட் விளையாடுவதைத் தவிர, 2015 இல் டாஸ்மேனியாவில் விளையாடியபோது, வால்ட்ரான் நடுவராக ஆர்வம் காட்டினார். நடுவருக்கான திறமையை வளர்த்துக் கொண்டு 2018 இல், ஆடவர் லிஸ்ட் ஏ போட்டியில் நடுவராக இருந்த முதல் பெண்மணி ஆனார். இந்நிலையில், தனது ஓய்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மேரி வால்ட்ரான், "இது வெளிப்படையாக மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நேரம். ஆனால் நான் சாதித்ததைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார். மேலும், "எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பிற்காக அயர்லாந்து கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும், எனது பயணத்தை வடிவமைத்து, எனக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளித்த பெம்ப்ரோக் மற்றும் மலாஹிட் ஆகியோருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.