இனி ஏப்ரல், மே மாதங்களில் IPL போட்டி கிடையாதா? BCCI ஆலோசிக்கும் புதிய ஷெட்யூல்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோடைகாலத் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) டி20 தொடரின் கால அட்டவணையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றைச் செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆலோசித்து வருகிறது. தற்போது வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரை, இனிவரும் காலங்களில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களுக்கு மாற்ற பிசிசிஐ பரிசீலித்து வருவதாக ஐபிஎல் கவர்னிங் கவுன்சில் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடுமையான கோடை வெயில், வீரர்களுக்கு ஏற்படும் அதீத சோர்வு மற்றும் 2028-ஆம் ஆண்டு முதல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது ஆகியவையே இந்த ஆலோசனையின் முக்கியக் காரணங்களாகும்.
கோடை
கோடை வெயிலும் வீரர்களின் சோர்வும்
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் கடந்த 18 சீசன்களாக ஏப்ரல் -மே மாத கோடை விடுமுறையைக் குறிவைத்தே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் மே மாதத்தில் இந்தியாவின் பெரும்பாலான மைதானங்களில் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலை உச்சத்தில் உள்ளது. இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்திற்கு அருண் துமால் அளித்த பேட்டியில்,"மே மாதத்தின் கடுமையான வெப்பத்தில் விளையாடுவது சர்வதேச வீரர்களுக்குப் பெரும் சவாலாகவும், உடல் ரீதியாக அதீத சோர்வையும் ஏற்படுத்துகிறது. தற்போதைக்கு அவசரமாக விண்டோவை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது மாற்று ஏற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது." என்று கூறியுள்ளார்.
அட்டவணை
செப்டம்பர் -அக்டோபர் அட்டவணை: தீபாவளி பிசினஸ் மாஸ்டர் பிளான்
ஐபிஎல் தொடரைச் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களுக்கு மாற்றுவதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய பொருளாதாரக் காரணியும் உள்ளது. இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்கள் பண்டிகைக் காலங்களாகும். குறிப்பாகத் தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய இந்த காலகட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களுக்காகக் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பார்கள். எனவே, விளம்பரதாரர்களின் பார்வையில் இந்த செப்டம்பர் - அக்டோபர் விண்டோ தான் ஐபிஎல் தொடருக்கு மிகச் சிறந்த லாபகரமான நேரமாக இருக்கும். இதுகுறித்து ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் வைத்துள்ள நிறுவனங்களுடன் விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அருண் துமால் தெரிவித்துள்ளார்.
விரிவு
2028-ல் விரிவடையும் ஐபிஎல்
தற்போது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று, இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்தமாக 74 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், வரும் 2028-ஆம் ஆண்டு முதல் போட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்குத் தற்போதைய 2 மாத கால அவகாசம் போதாது என்பதால், அடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC FTP) இருதரப்புப் போட்டி ஒப்பந்தங்களின் போது ஐபிஎல் தொடருக்கான புதிய விண்டோ அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்த மாற்றம் நடந்தால், இனி கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஃபேவரிட் ஐபிஎல் போட்டிகளைக் கோடைகாலத்திற்குப் பதிலாகக் குளிர்காலப் பண்டிகைச் சூழலில் கண்டுகளிக்கும் நிலை ஏற்படும்.