ஐபிஎல் இறுதிப் போட்டி: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது KKR
இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து, 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த ஹை-ஆக்டேன் இறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான KKR அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்றது. இதற்கு முன்னதாக 2012 மற்றும் 2014ல் KKR அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைய உதவிய முதல் கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
2024 ஐபிஎல்லின் சாதனைகள்
ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஐபிஎல் 2020 இன் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். தற்போது அவர் KKR ஐ 2024 ஐபிஎல் இறுதிசுற்றுக்கு வழிநடத்தியுள்ளார். மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, கெளதம் கம்பீர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற ஐந்தாவது இந்தியர் என்ற பெயரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்துள்ளது. ஐபிஎல் 2024 இல் 1,260 சிக்ஸர்கள் அடிக்கப்படவுள்ளன. இந்த வருட ஐபிஎல்லில் தான் வரலாற்றிலேயே அதிகமான சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. 2024 ஐபிஎல் சீசனில் 14 சதங்கள் அடிக்கப்பட்டன. இந்த வருட ஐபிஎல்லில் தான் வரலாற்றிலேயே அதிகமான சதங்களும் அடிக்கப்பட்டுள்ளன.