ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைகிறாரா? மும்பைக்கு செல்லும் அர்ஷ்தீப் சிங்
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான வீரர்கள் பரிமாற்றக் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வரும் நிலையில், கிரிக்கெட் உலகையே அதிரவைக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்குக் கொண்டுவர பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் மிகத் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் புதிய வழிகாட்டலில் இயங்கி வரும் பஞ்சாப் அணி, இந்த மெகா பரிவர்த்தனையை இறுதி செய்யும் உச்சக்கட்ட நிலையை எட்டியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரிக்கி பாண்டிங்கின் மாஸ்டர் பிளான்
மும்பையுடன் பேச்சுவார்த்தை
கடந்த சில சீசன்களாகவே ஒரு வலுவான கேப்டன்சி மற்றும் உலகத்தரம் வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் திணறி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த உந்துசக்தியாக இருப்பார் என தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருதுகிறார்.
மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துடன் பஞ்சாப் கிங்ஸ் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த டீலில் ஹர்திக் பாண்டியாவை தங்களுக்கு வழங்குவதற்கு ஈடாக, இந்திய அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் விஷ்ணு வினோத் ஆகிய இருவரையும் மும்பை இந்தியன்ஸுக்கு விட்டுக்கொடுக்க பஞ்சாப் அணி முன்வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பரிமாற்றம்
மும்பை இந்தியன்ஸுக்கு அர்ஷ்தீப் சிங்
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை டெத்-ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்துள்ள அர்ஷ்தீப் சிங்கை விடுவிப்பது பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் பின்னடைவாக அமையக்கூடும் என்றாலும், சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரைப் பெறுவதற்காக இந்த இமாலய முடிவை பஞ்சாப் துணிந்து எடுக்கத் தயாராகி வருகிறது.
மறுபுறம், ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து புதிய பந்திலும் டெத் ஓவர்களிலும் மிரட்டக்கூடிய ஒரு உலகத்தரம் வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரைத் தேடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அர்ஷ்தீப் சிங் வருகை மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும்.
எதிர்பார்ப்பு
திருப்பங்கள் நிறைந்த ஐபிஎல்!
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட பல அணிகள் ஹர்திக் பாண்டியாவை வாங்கப் போட்டி போட்ட சூழலில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தத் தீவிர பரிமாற்றப் பேச்சுவார்த்தையில் முன்னிலை வகிக்கிறது.
வீரர்களின் சம்மதம் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இந்த வரலாற்று சிறப்புமிக்க வீரர்கள் பரிமாற்றம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.