ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல்லில் தனது நீண்ட கால அணியான சென்னை சூப்பர் கிங்ஸில் (சிஎஸ்கே) இருந்து வெளியேறி கொல்கத்தா நைட் ரைடர்ஸில் (கேகேஆர்) இணைந்துள்ளார். 2011 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த டுவைன் பிராவோ, அந்த அணி தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டார். 2022 இறுதியில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்த டுவைன் பிராவோவை சிஎஸ்கே அணி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது. 10 ஆண்டுகளுக்கும் மேல் சிஎஸ்கே அணியில் இருந்த நிலையில், தற்போது அங்கிருந்து மாறி, மூன்று முறை பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பிராவோ நியமனத்தில் பின்னணி
2024 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து வெளியேறிய கௌதம் காம்பிர், ஐபிஎல் 2024இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வழிகாட்டியாக இருந்து, மூன்றாவது முறையாக அந்த அணி பட்டம் பெற உதவினார். இதைத் தொடர்ந்து அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், கேகேஆர் அணியின் புதிய வழிகாட்டியாக டுவைன் பிராவோவின் நியமனம் வந்துள்ளது. இதுகுறித்து கேகேஆர் சிஇஓ வெங்கி மைசூர் கூறுகையில், ஐபிஎல்லில் கேகேஆர் அணியைத் தவிர, இதர வெளிநாட்டு டி20 லீக்குகளில் நைட் ரைடர்ஸ் லேபிளின் கீழ் உள்ள அனைத்து அணிகளுக்கும் அவர் வழிகாட்டியாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.