
ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும்
செய்தி முன்னோட்டம்
18வது சீசன் ஐபிஎல் தொடர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது எல்லையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்கும் முனைப்பில் பிசிசிஐ செயல்படுகிறது.
பிசிசிஐ திட்டத்தின்படி, மீதமுள்ள 12 போட்டிகளை மே 30ஆம் தேதிக்குள் முடிக்க உத்தேசித்துள்ளது.
இதற்காக சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் இரு போட்டிகள் நடத்தப்படும் திட்டமும் பரிசீலிக்கப்படுகின்றது.
இதற்காக பிசிசிஐ, வெளிநாட்டு அணி வீரர்களின் பயண திட்டங்களை உடனடியாக உறுதி செய்யுமாறு அணிகள் உரிமையாளர்களை கேட்டுள்ளது.
அட்டவணை
இன்று புதிய அட்டவணை வெளியாகும் என எதிர்பார்ப்பு
நேற்றிரவு எஞ்சிய போட்டிகளுக்கான புதிய அட்டவணை வெளியாவதற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், அது வெளியிடப்படாமல் இருந்ததால், இன்று அட்டவணை வெளியாகும் என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக 3 மாதிரி அட்டவணைகள் தயாராக இருப்பதாகவும், அவற்றில் ஒன்று தேர்வாகும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 11 போட்டிகள் முடிந்த நிலையில், பிளே ஆப்பிற்குத் தகுதி பெறப்போகும் அணிகள் குறித்த எதிர்பார்ப்பு சூடுபிடித்திருந்தது. போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் கவனம் செலுத்திய நிலையில், வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.