ஐபிஎல் 2024 ஏலம் : டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2024 ஏலத்தில் பல அணிகளும் வாங்க விரும்பிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் டேரில் மிட்செலை ரூ.14 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது. முன்னதாக, 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அவர் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அந்த அணியின் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரராக முடித்தார். அவர் 10 போட்டிகளில் 69.00 என்ற சராசரியில் 552 ரன்கள் எடுத்தார். ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து பேட்டர்களில் ரன்களின் அடிப்படையில் ராச்சின் ரவீந்திரா மட்டுமே டேரில் மிட்செலை விட அதிக ரன் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்லில் முதல் முறையாக களமிறங்கும் டேரில் மிட்செல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள நிலையில் ஐபிஎல்லுக்கு டேரில் மிட்செல் புதியவர் ஆவார் மற்றும் 2024 சீசனில் தான் முதல்முறையாக களமிறங்க உள்ளார். எனினும், டி20 கிரிக்கெட்டில் அவர் 4,000 ரன்களுக்கு மேல் அடித்து அதிக ரன் குவித்தவர்களில் ஒருவராக உள்ளார். இதுவரை 186 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள டேரில் மிட்செல் 30.79 சராசரியில் 4,003 ரன்கள் எடுத்துள்ளார். அவரது டி20 ஸ்ட்ரைக் ரேட் 135.14 ஆகும் மற்றும் 18 அரை சதங்களையும் அடித்துள்ளார். இதற்கிடையே, நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன் குவித்த ராச்சின் ரவீந்திராவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.