IPL 2024 Auction : பென் ஸ்டோக்ஸுக்கு கல்தா கொடுக்க சிஎஸ்கே முடிவு; காரணம் இதுதான்
ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸை அணியிலிருந்து விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கொச்சியில் கடந்த ஆண்டு நடந்த கடைசி மினி ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கிய நிலையில், சீசன் முழுவதும் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். மேலும், ஸ்டோக்ஸின் இடது முழங்காலில் உள்ள காயத்திற்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும், குணமடைய இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு மாதங்களில் அவர் விளையாட்டிற்கு திரும்புவது சந்தேகமே என்பதால், எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பாமல் அவரை நீக்க முடிவு செய்துள்ளது.
பென் ஸ்டாக்ஸை தொடர்பு கொள்ள முடியவில்லை
ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகுதான் ஐபிஎல்லில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டோக்ஸுடன் சிஎஸ்கே நிர்வாகம் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தின் உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்த போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரிகளால் அவரை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. அவரது மேலாளருடனான உரையாடல்களும் வரவிருக்கும் சீசனுக்கு அவர் கிடைப்பது குறித்து உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரி ஒருவர், "ஸ்டோக்ஸ் ஒரு பெரிய மேட்ச் பிளேயர் என்பதால், ஸ்டோக்ஸை விடுவிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்க மாட்டோம். மேலும் நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். ஆனால் அவரால் சீசனுக்கு வர முடியாவிட்டால், ரூ.16 கோடியில் சில தரமான வீரர்களை வாங்க முடியும் என்பதால் அது குறித்து யோசித்தாக வேண்டும்." என்றார்.