IPL 2024 : இந்த தமிழக வீரருக்கு ஏலத்தில் ஜாக்பாட் நிச்சயம்; அஸ்வின் ரவிச்சந்திரன் கணிப்பு
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பர் 19இல் துபாயில் நடைபெறும். மேலும் 10 உரிமையாளர்களும் தங்களிடம் உள்ள தொகைக்கு ஏற்றவாறு வீரர்களை எந்த வீரர்களை கைப்பற்ற முடியும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, நட்சத்திர இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், ஐபிஎல் 2024 ஏலத்தில் உரிமையாளர்கள் எவ்வாறு வியூகம் வகுக்கக்கூடும் என்பதைத் தெரிவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின் ரவிச்சந்திரன், இந்த ஏலத்தில் பேட்டிங்கில் பவர் ஹிட்டரான தமிழக வீரர் ஷாருக் கான் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என கணித்துள்ளார்.
ஷாருக் கான் குறித்த அஸ்வின் ரவிச்சந்திரனின் முழுமையான அலசல்
தனது யூடியூப் சேனலில் ஷாருக் கான் குறித்து பேசிய அஸ்வின், "ஷாருக்கானுக்கு சிஎஸ்கே-குஜராத் இடையே போர் நடப்பதை என்னால் நிச்சயமாக பார்க்க முடிகிறது. குஜராத் ஹர்திக் பாண்டியாவை கைவிட்டுவிட்டது. தற்போது குஜராத்திற்கு இன்னிங்ஸை முடிக்கக்கூடிய ஒரு வீரர், அதாவது அவர்களுக்கு ஒரு பவர் பிளேயர் தேவை. ஷாருக் அவர் திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளதால் அவர் ரூ.12-13 கோடி வரை செல்லக்கூடும் என்று நான் நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் ஷாருக் கானைப் பெறுவதற்காக மிட்செல் ஸ்டார்க்கை இழக்கவும் தயாராகலாம். ஏனெனில் அவர்களிடம் உள்ளூர் வீரர் இல்லை. அவர்கள் மெகா ஏலத்தில் ஷாருக்கானை வாங்க முயற்சி செய்தார்கள் என்பதால் இதை நான் எதிர்பார்க்கிறேன்." என்றார்.