ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) எதிர்கொள்கிறது. 2022 மற்றும் 2021 சீசன்களில் பிளேஆஃப் வாய்ப்பை தவறவிட்ட ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி இந்த முறை மிகச் சிறந்த கம்பேக் கொடுக்கும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் 2023க்காக கடந்த டிசம்பரில் நடந்த மினி-ஏலத்தில் மும்பை அணி ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக விலையை பெற்ற வீரர் என்ற பெருமையை கேமரூன் கிரீன் பெற்றார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கடந்த கால செயல்திறன்
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் முதன்மையானதாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் ஐந்து பட்டங்களை (2013, 2015, 2017, 2019, மற்றும் 2020) தன்வசம் வைத்துள்ளது. ஐந்து பட்டங்களையும் ரோஹித் சர்மா தலைமையில் தான் மும்பை இந்தியன்ஸ் வென்றது. ஆனால் அந்த அணியால் முறையே 2021 மற்றும் 2022 சீசன்களில் பிளேஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. 2022 ஆம் ஆண்டில், ஐபிஎல் சீசனில் முதல் எட்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் பெற்ற படுதோல்விக்கு, "இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே" என மும்பை இந்தியன்ஸ் சீறி எழுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.