ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
திங்கட்கிழமை (மே 8) ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2023 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மெதுவாக பந்துவீசிய குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் அவரது அணி செய்த முதல் குற்றம் என்பதால், ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடைசிப் பந்து வரை திக்திக் நிலையில் போராடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதிலும் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடைசி பந்தில் ரின்கு சிங் அடித்த பவுண்டரி மூலமே இந்த வெற்றி சாத்தியமான நிலையில், அவரை நிபுணத்துவம் வாய்ந்த மிகச் சிறந்த ஃபினிஷர் என அணியின் கேப்டன் நிதிஷ் ராணா புகழாரம் சூட்டியுள்ளார்.