ஐபிஎல்லில் 200+ ஸ்கோரை தொடர்ச்சியாக 2 முறை சேஸ் செய்த ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை
மொஹாலி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 சீசனின் 46வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசியதன் மூலம் 215 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமாக சேஸ் செய்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அதிக இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்த மூன்றாவது ஸ்கோர் ஆகும். 2020 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 224 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து முதலிடத்தில் உள்ளது. 2021 இல் மும்பை இந்தியன்ஸ் எடுத்த 219 ரன்களை சேஸ் செய்தது இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 215 சேஸிங் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தொடர்ச்சியாக 200+ ஸ்கோர்களை சேஸ் செய்த அணிகள்
மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 213 ரன்களை வெற்றிகரமாகத் துரத்தியது. இதன் மூலம் தற்போது ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை தொடர்ச்சியாக இரண்டாவது முறை சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. முன்னதாக 2011 சாம்பியன்ஸ் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் 2020-21 சையத் முஷ்டாக் அலி டிராபியில் கேரளா ஆகிய அணிகள் மட்டுமே டி20 தொடரில் 200க்கும் மேற்பட்ட இலக்குகளை தொடர்ச்சியாக சேஸ் செய்து வெற்றி பெற்ற அணிகளாக உள்ளன. இதற்கிடையே நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஐந்து போட்டிகளில் 200+ ஸ்கோர்கள் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.