
ஐபிஎல் 2023 : ஜேசன் ராயை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் மாற்று வீரராக இங்கிலாந்தின் ஜேசன் ராயை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகிய இருவரும் ஏற்கனவே ஐபிஎல் 2023 தொடரிலிருந்து விலகியதால் கேகேஆர் அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ள நிலையில், ஷாகிப் அல் ஹசன் வங்கதேச அணியின் சர்வதேச போட்டிகள் காரணமாக விலகியுள்ளார்.
இந்நிலையில், கேகேஆர் ஜேசன் ராயை ரூ. 2.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் அவரது அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஜேசன் ராய்
ஜேசன் ராயின் டி20 கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்
ஜேசன் ராய் 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 29.91 சராசரியில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவர் இரண்டு அரைசதங்களை எடுத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில், ராய் 27.77 என்ற சராசரியில் 8,110 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 6 சதங்கள் மற்றும் 53 அரைசதங்கள் அடித்துள்ளார்.
டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்காக, ராய் 64 ஆட்டங்களில் 24.15 சராசரியில் 1,522 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பாக ஐபிஎல் 2021 இல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ராய் ஐந்து ஆட்டங்களில் 150 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு அரைசதம் அடித்தார்.
மேலும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ராய் குஜராத் டைட்டன்ஸால் வாங்கப்பட்ட நிலையில் கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுத்து, போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.