LOADING...
ஒலிம்பிக் போட்டிகளில் இனி திருநங்கைகள் பங்கேற்க முடியாது; ஐஓசி கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு
ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகளுக்குத் தடை

ஒலிம்பிக் போட்டிகளில் இனி திருநங்கைகள் பங்கேற்க முடியாது; ஐஓசி கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
10:55 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச விளையாட்டு உலகில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நடவடிக்கையாக, ஒலிம்பிக் போட்டிகளின் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதற்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தடை விதித்துள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற ஐஓசி செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, 10 பக்கங்கள் கொண்ட புதிய கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவில் பங்கேற்க 'உயிரியல் ரீதியான பெண்கள்' (Biological Females) மட்டுமே தகுதியுடையவர்கள். இதனை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வீரரும் தங்களது விளையாட்டு வாழ்க்கையில் ஒருமுறை கட்டாய மரபணு சோதனைக்கு உட்பட வேண்டும் என ஐஓசி தெரிவித்துள்ளது.

காரணங்கள்

அறிவியல் ரீதியான காரணங்கள்

ஆண்களாகப் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே உடல் ரீதியான நன்மைகள் இருப்பதாக ஐஓசி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கருவில் இருக்கும் போதும், குழந்தைப் பருவத்திலும் மற்றும் பருவமடையும் போதும் ஆண்களுக்கு ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு, அவர்களுக்கு அதீத வலிமை, வேகம் மற்றும் தாங்கும் திறனை வழங்குகிறது. ஹார்மோன் சிகிச்சைகள் மேற்கொண்டாலும், இந்த அடிப்படை உடல் நன்மைகள் முழுமையாக மறைவதில்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த முடிவு அமெரிக்க அதிபர் டிரம்பின் 'பெண்கள் விளையாட்டில் ஆண்களைத் தடுத்தல்' என்ற நிர்வாக உத்தரவுடன் ஒத்துப்போகிறது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் திருநங்கைகளை அனுமதிக்கும் அமைப்புகளுக்கான நிதியை ரத்து செய்யவும், அத்தகைய வீரர்களுக்கு விசா மறுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

விளக்கம்

தலைமை அதிகாரியின் விளக்கம்

ஐஓசியின் முதல் பெண் தலைவரான கார்ஸ்டி கோவென்ட்ரி இது குறித்துக் கூறுகையில், "ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு சிறிய வினாடி கூட வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும். எனவே, உயிரியல் ரீதியான ஆண்கள் பெண்கள் பிரிவில் போட்டியிடுவது நியாயமாக இருக்காது. பெண்கள் பிரிவின் நேர்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம்." என்று தெரிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறை திருநங்கைகளை மட்டுமல்லாமல், காஸ்டர் செமென்யா போன்ற இயற்கையாகவே அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவு கொண்ட வீராங்கனைகளையும் பாதிக்கும். ஏற்கனவே தடகளம், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற விளையாட்டுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், இப்போது அனைத்து ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இது பொதுவான விதியாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement