ஹர்மன்பிரீத் கெளர் விலகலும் உட்கட்சி மோதலும்! ஸ்மிருதி மந்தனா கேப்டனானதன் பின்னணியில் நடந்த பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், இது மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்ற விமர்சனமும் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகத் தங்கம் வென்றபோதிலும், தொடர்ந்து இரு டி20 உலகக்கோப்பைத் தொடர்களில் ஏற்பட்ட பின்னடைவு தலைமை மாற்றத்தைக் கோரியது. கவுஹாத்தியில் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைக்கியா தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் தலைமை மாற்றம் தவிர்க்க முடியாதது என உணர்த்தப்பட்ட பின்னரே, ஹர்மன்பிரீத் கெளர் தானாகவே விலகும் முடிவை எடுத்தார்.
சலசலப்பு
ட்ரெஸ்ஸிங் ரூம் சலசலப்பும் மூத்த வீரர்களின் கருத்தும்
கேப்டன் பதவி தொடர்பாக ஹர்மன்பிரீத் மற்றும் மந்தனா இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்ததாகவும், இது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில்,"இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஸ்மிருதி மந்தனாவுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பை வழங்கி இருக்க வேண்டும்" என பதிவு செய்திருந்தார்.
2013-இல் அறிமுகமாகி 10,000 சர்வதேச ரன்களை கடந்துள்ள ஸ்மிருதி மந்தனா, தற்போது நாட்டின் சிறந்த பேட்டராக விளங்குகிறார்.
மகளிர் பிரீமியர் லீக்கில் பெங்களூரு அணிக்கு இருமுறை கோப்பை வென்று தந்த அனுபவத்தோடு, இந்திய அணியை இனிவரும் பெரிய தொடர்களில் சாம்பியன் பட்டம் பெற வைப்பதே இவரது முதன்மை சவாலாக இருக்கும்.