இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : ரோஹித் ஷர்மாவுக்கு அலெர்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடியதைப் போல் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் இல்லாமல், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு தனது மனநலத்தை விரைவாக சரிசெய்ய வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கும் இந்த பாக்சிங் டே டெஸ்டில், ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு ரோஹித் ஷர்மா முதல்முறையாக விளையாட உள்ளார்.
சுனில் கவாஸ்கர் கருத்து
ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் சுனில் கவாஸ்கர் கூறுகையில், "ரோஹித் ஷர்மாவுக்கு முதலில் மற்றும் முக்கியமாக, அவரது மனநிலையை ஒரு டெஸ்ட் போட்டிக்கு கொண்டு செல்வதே சவாலாக இருக்கும். அவர் தாக்குதல் ஆட்டத்தைக் கைவிட்டு, அவர் தனது அணுகுமுறையை முழுவதுமாக மாற்ற வேண்டும். ஏனென்றால் அவர் நாள் முழுவதும் பேட்டிங் செய்வதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர் நாள் முழுவதும் பேட்டிங் செய்தால், அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும்." என்று கூறினார். ரோஹித் ஷர்மா தென்னாப்பிரிக்காவில் 4 டெஸ்டில் 15க்கும் சற்று அதிகமான சராசரியுடன் 123 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் 2019இல் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க ஆரம்பித்த பிறகு, தென்னாப்பிரிக்காவில் அவரது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.