INDvsSA டி20: ஒரே தொடரில் இரண்டு சாதனைகளை படைத்தார் சஞ்சு சாம்சன்; என்னென்ன தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் மூன்று டி20 கிரிக்கெட் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 9 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் எடுத்தார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் சதமடித்திருந்த சஞ்சு சாம்சன், அதற்கு முந்தைய வங்கதேச டி20 தொடரின் கடைசி போட்டியிலும் சதமடித்திருந்தார்.
மோசமான சாதனை படைத்த சஞ்சு சாம்சன்
ஒருபுறம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் மூன்று சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த நிலையில், இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடரின் முந்தைய போட்டியில் ஒரு மோசமான சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை 17 டி20 இன்னிங்ஸ்களில் களமிறங்கியுள்ள சஞ்சு சாம்சன் அதில் 5 முறை டக்கவுட் ஆகியுள்ளார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக்கவுட் ஆன இந்திய விக்கெட் கீப்பர் என்ற மோசமான சாதனையை படைத்தார். முன்னதாக, இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் 4 டக்கவுட்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடரின் 2 மற்றும் 3வது போட்டிகளில் டக்கவுட் ஆகி சஞ்சு சாம்சன் அதை முறியடித்துள்ளார்.