Page Loader
INDvsNZ Semifinal போட்டிக்கு மழையால் ஆபத்தா? வானிலை அறிக்கை இதுதான்
இந்தியா vs நியூசிலாந்து போட்டிக்கான வானிலை அறிக்கை

INDvsNZ Semifinal போட்டிக்கு மழையால் ஆபத்தா? வானிலை அறிக்கை இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2023
10:44 am

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (நவம்பர் 15) மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இந்தியா முன்னதாக நடந்த ஒன்பது லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவாக உள்ள நிலையில், நியூசிலாந்து தட்டுத் தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஆனால், ஐசிசி நாக் அவுட் போட்டி வரலாற்றில் இந்திய அணி இதுவரை ஒருமுறை கூட நியூசிலாந்தை வீழ்த்த முடியாமல் திணறி வந்துள்ளதால், இந்த போட்டி சற்று பீதியையும் இந்திய ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரு அணிகளும் 2019இல் முந்தைய ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் மோதியபோது மழை குறிக்கிட்டதை போல் இப்போதும் நடந்துவிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

INDvsNZ Semifinal weather report

இந்தியா vs நியூசிலாந்து போட்டிக்கான வானிலை அறிக்கை

நியூசிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் இந்த போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. Weather.com அறிக்கையின்படி, புதன் கிழமை மழைக்கு 1% மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஆனால் 60% ஈரப்பதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ஈரப்பதம் இருப்பது வீரர்களுக்கு மைதானத்தில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், டாஸ் வெல்லும் அணிக்கு அது சற்று சாதமாக மாறக்கூடிய வாய்ப்புண்டு. முன்னதாக, 2019இல் மழை காரணமாக இரண்டு நாட்கள் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா ஈரப்பதம் காரணமாக போராடி தோற்றது குறிப்பிடத்தக்கது.