Page Loader
INDvsNZ Semifinal : ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் நியூஸிலாந்திடம் தோல்வியை மட்டுமே கண்டுள்ள இந்தியா; சோக பின்னணி
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் நியூஸிலாந்திடம் தோல்வியை மட்டுமே கண்டுள்ள இந்தியா

INDvsNZ Semifinal : ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் நியூஸிலாந்திடம் தோல்வியை மட்டுமே கண்டுள்ள இந்தியா; சோக பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2023
10:31 am

செய்தி முன்னோட்டம்

நவம்பர் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 அரையிறுதியில் நியூசிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி மோத உள்ளது. முன்னதாக, 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியிலும், நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா, அந்த போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த முறை அதற்கு பழி தீர்க்கும் முனைப்பில் உள்ளது. ஐசிசி போட்டிகளை பொறுத்தவரை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், நியூசிலாந்து 5 முறையும், இந்தியா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது. அதேநேரம், நாக் அவுட் போட்டிகளில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

2000 ICC Champions Trophy final INDvsNZ

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2000

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இதுவரை மூன்று போட்டிகளில் மோதியுள்ளன. முதல்முறையாக 2000இல் சாம்பியன்ஸ் டிராபி உறுதிப்போட்டியில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில், கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தாலும், மிடில் ஆர்டர் தடுமாறியதால் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் மட்டுமே எடுத்தது. அனில் கும்ப்ளே மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் சிறப்பாக பந்துவீசிய நிலையில், நியூசிலாந்து ஆரம்பத்தில் 132/5 என தடுமாறினாலும், ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் 113 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

2019 ICC World Cup Semifinal INDvsNZ

ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதி, 2019

2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் சிறப்பாக செயல்பட்டாலும், மற்ற வீரர்கள் சொதப்பியதால், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கிடையே, 46.1 ஓவர்களுக்குப் பிறகு மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு அடுத்த நாள் விளையாடப்பட்டது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறி, முதல் மூன்று இடங்களில் களமிறங்கிய கேஎல் ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எம்எஸ் தோனி 50 மற்றும் ரவீந்திர ஜடேஜா 77 ரன்களுடன் கடுமையாக போராடினாலும், இந்தியா 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது.

2021 World Test Championship Final INDvsNZ

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2021

2021இல் நடந்த முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இந்தியா மீண்டும் தோல்வியை சந்தித்தது. டாஸ் இழந்த இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கைல் ஜேமிசனின் அபார பந்துவீச்சில் இந்தியா வெறும் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய அணி மற்றொரு துயரத்தை எதிர்கொண்டது. நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 139 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரின் பார்ட்னர்ஷிப் இறுதியில் இந்திய அணிக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்தது.

2023 ODI World Cup INDvsNZ Semifinal

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா vs நியூசிலாந்து

தற்போது நடந்து வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றில் அக்டோபர் 22 அன்று நேருக்கு நேர் மோதின. இந்த போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டிக்கு பிறகு தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து, கடைசி போட்டியில் மட்டும் வெற்றி பெற்று போராடி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மறுபுறம், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவாமல் மிகவும் வலுவாக உள்ளது.