INDvsNZ 2வது டெஸ்ட்: அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த வாஷிங்டன் சுந்தர்
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், வாஷிங்டன் சுந்தர் சாதனை படைத்தார். வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய வீரர் ரவிச்சந்திரன் சுழலில் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர், நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்த வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து முதல் நாளில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெவோன் கான்வே 76 ரன்களும், ராச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர்.
வாஷிங்டன் சுந்தரின் அபார செயல்திறன்
முதல் போட்டியில் அணியில் சேர்க்கப்படாத இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர், இந்த போட்டியில் 16வது வீரராக இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து விளையாடும் லெவனில் இடம்பிடித்து தனது முதல் போட்டியில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் இதில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சுந்தர் இதில் 5 பேரை பவுல்ட் அவுட் மூலம் வெளியேற்றி, ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 பேரை பவுல்ட் அவுட் ஆக்கிய ஐந்தாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர், ஜாஷுபாய் படேல் (1959), பாபு நட்கர்னி (1960), அனில் கும்ப்ளே (1992) மற்றும் ரவீந்திர ஜடேஜா (2023) மட்டுமே இதை செய்துள்ளனர். இந்நிலையில், வாஷிங்டன் சுந்தர் தற்போது நான்கு வீரர்களின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த போட்டி தொடங்கும் முன்னதாக 187 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் முதலிடத்தில் இருக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 186 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில், இதில் இரண்டாவது விக்கெட்டை எடுத்தபோது, நாதன் லியோனின் சாதனையை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் எடுத்த டாப் 5 வீரர்களில் ஒரே ஒரு இந்தியராக இவர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.