INDvsNZ முதல் டெஸ்ட்: இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்; நியூஸி.க்கு எதிராக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கானை இந்தியா விளையாடும் லெவன் அணியில் சேர்த்துள்ளது. ஷுப்மன் கில் கழுத்து வலியால் அவதிப்படுவதால் அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ளார். கான்பூர் டெஸ்டில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடிய அணியுடன் ஒப்பிடும்போது, இந்தியா தனது லெவன் அணியில் செய்த இரண்டு மாற்றங்கள் இவை மட்டுமேயாகும். இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு சர்ஃபராஸ் மீண்டும் விளையாடும் லெவன் அணிக்கு திரும்புகிறார்.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல்
இந்தியா: ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ். நியூசிலாந்து: டாம் லாதம், டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், க்ளென் பிலிப்ஸ், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே. இதற்கிடையே, டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணி, 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்களுடன் தத்தளித்து வருகிறது.