INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. 110 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்த 89 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
விராட் கோலி - கேஎல் ராகுல் பார்ட்னர்ஷிப்பில் வெற்றி பெற்ற இந்தியா
200 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் டக்கவுட் ஆகி வெளியேறினர். மேலும் ஷ்ரேயாஸ் ஐயரும் டக்கவுட் ஆக இந்திய அணி பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. எனினும், அதன் பின்னர் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். விராட் கோலி 85 ரன்களில் அவுட்டான நிலையில், கேஎல் ராகுல் கடைசி வரை அவுட்டாகாமல் 97 ரன்கள் எடுத்தார். 41.2 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்தியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.