INDvsAUS 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்தது இந்தியா
புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. அந்த அணியின், டேவிட் வார்னர் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 72 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி
353 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 81 ரன்கள் சேர்த்தார். மேலும், விராட் கோலி அரைசதம் கடந்து 56 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களும் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பொய்த்துப் போனது.