INDvsAFG : அபார வெற்றி பெற்ற இந்திய அணி; புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்
புதன்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் இருவரும் அரைசதம் அடித்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ரோஹித் ஷர்மா அபார சதம்
273 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ரோஹித் ஷர்மா ஆப்கான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இஷான் கிஷன் 47 ரன்களில் அவுட்டான நிலையில், ரோஹித் ஷர்மா சதமடித்து 131 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் துலாக்கோப்பை வரலாற்றில் அதிக சதமடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். இதையடுத்து விராட் கோலி அரைசதம் அடிக்க, கோலி (55) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (25) கடைசி வரை அவுட்டாகாமல் 35 ஓவர்களில் இலக்கை எட்டினர். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.