INDvsNED ஒருநாள் உலகக்கோப்பை: நெதர்லாந்து அணியில் புதிய வீரர் சேர்ப்பு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நெதர்லாந்து கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் ரியான் க்ளீன் முதுகில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறியதால், நெதர்லாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், அவருக்கு பதிலாக பேட்டர் நோவா குரோஸ் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதையும் அணி உறுதி செய்துள்ளது. குரோஸ் தனது வாழ்க்கையில் நெதர்லாந்திற்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே இதுவரை இடம் பெற்றுள்ளார். அது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியாகும்.
புதுப்பிக்கப்பட்ட நெதர்லாந்து அணி
நெதர்லாந்தை பொறுத்தவரை, தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும் வேட்டையில் உள்ளனர். இதற்கு புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் வருவதற்கு அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே சமயம், இந்தியா நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவாமல் மிகவும் வலுவாக உள்ளது. நெதர்லாந்து புதுப்பிக்கப்பட்ட அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், நோவா குரோஸ், வெஸ்லி பாரேசி, சாகிப் சுல்பிகார், ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.