படிப்பு முக்கியம் பிகிலு; 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வால் நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை
அக்டோபர் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தக்கவைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால், அவர் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தேர்வாளர்கள் அவரைத் தலைவராகத் தொடர தேர்வு செய்துள்ளனர். இதற்கிடையே, 21 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிச்சா கோஷ், தனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ஆஷா சோபனா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதேநேரத்தில் ஆல்ரவுண்டர் பூஜா வஸ்த்ரகருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீராங்கனைகள் பட்டியல்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியா ஏ அணியில் இடம்பிடித்த தேஜல் ஹசாப்னிஸ், சயாலி சத்கரே, பிரியா மிஸ்ரா மற்றும் மகளிர் ஐபிஎல்லில் இடம்பெற்ற சைமா தாகூர் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 உலகக்கோப்பையில் போராடிய ஸ்மிருதி மந்தனா, துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நான்கு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள உமா செத்ரி, இந்தத் தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார். இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, டி ஹேமலதா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா, உமா செத்ரி, சயாலி சத்கரே, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தேஜல் ஹசாப்னிஸ், சைமா தாக்கூர், பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல்.