ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன?
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா இதில் பங்கேற்றால் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டிலும் தங்கம் வெல்வதற்கான முழு வாய்ப்பும் இந்தியாவுக்கு உள்ளது. எனினும் பிசிசிஐ ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அணிகளை அனுப்பாததற்கான காரணங்களை மேற்கோளிட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதலில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் சீனாவின் பூஜ்ஜிய கொரோனா கொள்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 28 வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்காதது குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளது.
பிசிசிஐ தரப்பில் கூறப்படும் காரணம் என்ன?
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியாவின் தலைவர் பூபேந்தர் பஜ்வா கிரிக்கெட் அணிகள் பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்ததை உறுதிப்படுத்தினார். இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், இந்திய ஒலிம்பிக் கமிட்டி அணிகளை அனுப்புவது தொடர்பாக காலக்கெடுவுக்கு 1 நாளுக்கு முன்பு தான் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்திய அணிகளுக்கான எஃப்டிபி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மகளிர் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும். அதே வேளையில், ஆடவர் அணி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட உள்ளது.