சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள்
நான்கு நாடுகள் பாரா பாட்மின்டன் தொடரானது கடந்த ஆகஸ்ட் 2 முதல் 6-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில், இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 18 பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்கள். 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் உட்பட 18 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. மகளிர் இரட்டையர் பிரிவில் மானசி ஜோஷி மற்றும் துளசிமதி முருகேசன் இணை தங்கம் வென்றிருக்கிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிருஷ்ணா நாகர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரமோத் பகத் மற்றும் சுகந்த் கதம் இணை ஆகியோரும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்கள்.
வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வீரர்கள்:
ஆடவர் இரட்டையர் பிரிவில் சிராக் பரீதா மற்றும் ராஜ் குமார் இணை, ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரமேத் பகத் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனீஷா ராம்தாஸ் மற்றும் பகத் இணை ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். மகளிர் ஒற்றையர் பிரிவில் நித்யா சிவன் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவில் தீப் பிசோயி மற்றும் மனோஜ் சர்க்கார் இணை ஆகியோரும் வெற்றிப் பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறார்கள். மேலும், இந்த பாரா பாட்மின்டன் தொடரில், ஐந்து ஒற்றையர் பிரிவுகள் மற்றும் ஐந்து இரட்டையர் பிரிவுகளில் 10 பதக்கங்களை தட்டிச் சென்றிருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.