தெலுங்கானா மாநிலத்தில் டிஎஸ்பியாக பதவியேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தெலுங்கானா காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11) துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பொறுப்பேற்றுள்ளார். தெலுங்கானா காவல்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலுங்கானாவின் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கிரிக்கெட் சாதனைகள் மற்றும் மாநிலத்திற்கான அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடருவார். அதே நேரத்தில் தனது புதிய பொறுப்பால் பலரை ஊக்குவிக்கிறார்." எனக் குறிப்பிட்டுள்ளது. ஹைதராபாத்தில் பிறந்த கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ், தனக்கு இந்த பதவியை வழங்கியதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்திய அணியில் முகமது சிராஜ்
முகமது சிராஜ் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பந்துவீச்சு பிரிவில் முன்னிலை வகிக்கிறார். 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தனது டெஸ்டில் அறிமுகமான முகமது சிராஜ், இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் லெவன் அணியில் வழக்கமாக உள்ளார். அந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியில், குறிப்பாக பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த உள்நாட்டு தொடரிலும் முகமது சிராஜ் நன்றாகவே செயல்பட்டார். அடுத்து அக்டோபர் 16 அன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார்.