வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 கணக்கில் வென்றது இந்தியா
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா. வங்கதேச அணி இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி உ.பி., கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. எனினும் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில், வங்கதேசம் 107/3 என்ற நிலையில் இருந்தது. 2வது மற்றும் 3வது நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. 4வது நாளான செப்டம்பர் 30-இல், இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பந்துவீச்சாளர்கள் அபார ஆட்டத்தில் சுருண்ட வங்கதேசம்
இந்த நிலையில், கடைசி நாளான இன்று, இந்திய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் தரவே, வங்கதேசம் 146 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அஷ்வின், ஜடேஜா, பும்ரா மூவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 95 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா (8) மற்றும் சுப்மன் கில் (6) ஏமாற்றம் கண்டனர். ஜெய்ஷ்வால் (51) அரைசதம் கடந்து, வெற்றித் தருணத்தில் விக்கெட் இழந்தார். இறுதியில், 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்த இந்திய அணி வெற்றி பெற்றது. கோலி (29) மற்றும் ரிஷப் பந்த் (4) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியுடன், இந்திய அணி 'டெஸ்ட் சாம்பியன்ஷிப்' பைனலுக்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியது.